Mulla and the Donkey Curse – கழுதையாக மாறிய முல்லா: முல்லா இருக்கிற கிராமத்துல அதிகமா திருட்டு நடக்க ஆரம்பிச்சுச்சு, ஊர்ல இருக்க எல்லாரும் திருட்டு பயத்துல இருந்தாங்க

அதனால முல்லாவும் ராத்திரி நேரத்துல தூக்கம் இல்லாம திருட்டு பயத்துல தவிச்சாரு, ராத்திரி முழுசும் தோட்டத்திலையும் வீட்டை சுத்தியும் அடிக்கடி காவல் காக்க போனாரு முல்லா

அப்படி ஒரு நாள் தோட்டத்துல யாராவது திருடங்க இருக்காங்களான்னு பார்க்க போன முல்லாவுக்கு அதிர்ச்சி, தோட்டத்து வேலி ஓரத்துல ஒரு திருடன் ஒளிஞ்சிருக்கிறத பார்த்தாரு, உடனே முல்லாவும் ஒரு மரத்துக்கு பின்னாடி போயி ஒளிஞ்சிகிட்டாரு

மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்த முல்லா அந்த திருடன் அடுத்து என்ன செய்யப் போறான்னு பார்த்துக்கிட்டே இருந்தாரு, வேலி ஓரத்திலேயே ஒளிஞ்சிருந்த அந்த திருடன் நடுராத்திரி ஆனதும் மெதுவா தோட்டத்துக்குள்ள வந்தான்

அங்க கட்டி வச்சிருந்த முல்லா வோட கழுதையை மெதுவா கலட்டி தோட்டத்துக்கு வெளியே கொண்டு வந்தான், இத பார்த்த முல்லா மெதுவா அவன் பின்னாடியே நடந்து போனாரு

யாரும் பாத்திர கூடாதுன்னு மெதுவா நடந்த அந்த திருடன் முன்னாடி யாராவது வராங்களான்னு பார்த்துக்கிட்டே இருந்தா, அப்பத்தான் முல்லா தன்னோட கழுதையோட கழுத்துல கட்டி இருந்த கயித்த அவுத்து தன்னோட கழுத்துல கட்டிக்கிட்டாரு.

இத கவனிக்காத திருடன் தான் கழுதையைத்தான் இழுத்துட்டு போறதா நினைச்சு மேலும் நடந்து கிட்டே இருந்தான், காட்டுப்பகுதியில் இருக்கிற தன்னோட வீட்டுக்கு போன திருடன் திரும்பிப் பார்த்தான்

கழுதைக்கு பதிலா ஏதோ ஒரு பெரியவர் கழுத்துல கயிறு இருக்கிறத பார்த்து அவனுக்கு ஒரே அதிர்ச்சி, அய்யய்யோ யாரு நீங்க நீங்க எப்படி இங்க வந்தீங்கன்னு கேட்டான், அதுக்கு முல்லா சொன்னாரு நான் ஒரு நல்ல பூதம்

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு சாபத்தினால கழுதையா மாறிட்டேன், என்னைக்கு நல்லவர் ஒருத்தரோட கையி பட்டதும் என்னோட சாபம் முடிஞ்சிடும்னு எனக்கு சொன்னாங்க, நானும் பல வருஷமா காத்துகிட்டு இருந்தேன் ஆனா இன்னைக்கு தான் எனக்கு சாப விமோசனம் கிடைச்சுச்சு

இனிமே நான் உங்கள் அடிமை எனக்கு இனிமே நீங்கதான் சோறு போடணும் நான் இனிமே உங்க சொத்து அப்படின்னு சொன்னாரு முல்லா, இது என்னடா தொல்லையா போச்சுன்னு நெனச்ச திருடன் நானே திருட்டு தொழில் செஞ்சு பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கேன் இதுல இந்த தொல்லை வேற வந்து இருக்கு அப்படின்னு நினைச்சு வருத்தப்பட்டான்

மறுநாள் அந்தத் திருடன் திருட போறப்ப முல்லாவும் பின்னாடியே போனாரு, ஒரு வீட்டு தோட்டத்துல ஒளிஞ்சிருந்து வீட்டுக்குள்ள யாரு இருக்கான்னு பார்த்தா அந்த திருடன், அப்பத்தான் முல்லா கழுத மாதிரி கத்துனாரு

இத கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் வேகமா ஓடி வந்தாங்க உடனே திருடன் பின்னாடி வழியா தப்பிச்சு போக பார்த்தான் ,

ஆனா முல்லா அவன பிடிச்சுகிட்டு எங்க ஓடுறீங்க நல்லவரே அப்படின்னு கேட்டாரு

அப்பத்தான் அந்த திருடன் முல்லா ஓட கையத்தட்டி விட்டுட்டு ஓட பார்த்தான் அதுக்குள்ள கிராமத்துக்காரங்க எல்லாரும் ஒண்ணா வந்துட்டாங்க திருடனை பார்த்ததும் எல்லோரும் அவன அடிக்க ஆரம்பிச்சாங்க

ரொம்ப நாள் திருட்டு பயத்திலே இருந்து அவங்க திருட்டுப்பயல பிடிச்சு கொடுத்த முல்லாவுக்கு நன்றி சொன்னாங்க
